Skip to main content

‘மிக கனமழை பெய்யும்’ - ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'Heavy rain likely' - orange alert issued by Meteorological Centre

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 6 ஆம் தேதி வரை (06.01.2024) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (05.01.2024) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (06.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் (07.01.2024)  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இரு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. ஜனவரி 8 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்