
தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் மிக்ஜாம் புயலின் எதிரொலியாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக அப்பகுதியில் உள்ள சுமார் 5 வீடுகளுக்குள் மழை நீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் கட்டில்கள் மற்றும் நாற்காலிகள் மேல் தூக்கத்தை தொலைத்து உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வந்தது. மேலும் மாணவர்கள் காலையில் பள்ளியில் செல்வதற்கு சிரமமாக இருந்தது.
இப்பகுதியில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், பல இடங்களில் மழைநீர் வழித்தடங்கள் சரிவர அமைக்கப்படாத காரணத்தால் மழைக்காலங்களில் தொடர்ந்து இதே சூழ்நிலை ஏற்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். மழைக்காலங்களில் தொடர் கதையாக உள்ள இந்த பிரச்சனையை சரி செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.