
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 130 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
புயல் சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது இன்று இரவு 11 மணிக்கு மேல் அதிகாலை 3 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகப் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மணி நேரமாக சென்னையில் பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
அதேபோல மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது; இதன் காரணமாக அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.