Heavy rain in 16 districts of Tamil Nadu today

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத்திரும்பி வருகின்றனர். அதே சமயம் வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 12 செ.மீ மழை பொழிந்துள்ளது. குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.