/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fog-railway-art.jpg)
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக அதிகாலையில் பனியின் தாக்கமானது அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் பனிப்பொழிவு சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வெப்பநிலையின் குறைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று (04.02.2025) அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாகச் செல்லும் அனைத்து பயணிகள் மின்சார ரயில்களும் சுமார் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.
அதே போன்று சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கும், அவதியும் அடைந்துள்ளனர். அதே சமயம் சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் மற்றும் ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பனி முட்டத்தால் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஒட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
கடும் பனிமூட்டம் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் இருந்து தரையிறங்கக்கூடிய மற்றும் புறப்படக்கூடிய 25க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலைய பகுதியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் ஐதராபாத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. அதோடு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்துள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)