/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/834_2.jpg)
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனையானது முடிந்த உடன் உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வாணி ஜெயராமுக்கு ஜனவரி 26ல் மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் அவர்களுக்கு கிடைத்தது. 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். நேர்மைக்கு சொந்தக்காரர். மிக அற்புதமான பாடகர்.
சமீபத்தில் பாஜகவின் தேசியத் தலைவர், அகில இந்திய பொதுச் செயலாளரை இங்கு அனுப்பி வைத்தார். இங்கு வாணி ஜெயராமை சந்தித்து விருதுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அன்று அவருடன் என்னால் வர முடியவில்லை. நான் டெல்லி செல்ல இருந்த காரணத்தால் அவர் மட்டும் வந்திருந்தார். இன்று இப்படி ஆனதை பார்க்கும் பொழுது மனம் வேதனை அடைகிறது. பத்மபூஷன் விருதினைக் கூட நேரில் வாங்க முடியவில்லை என்ற வேதனை உள்ளது” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)