/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambulan434343.jpg)
திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 21 வயது இளைஞரின் இதயம் வேலூரில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் எடுத்து வரப்பட்டது.
வெறும் 90 நிமிடங்களில் 150 கி.மீ. தூரம் பயணித்து வேலூரில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளது ஓர் இதயம். அந்த இதயத்தின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிநெடுகிலும் இடையூறு இல்லாதப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை. அந்த இதயம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வசித்து வரும் 21 வயதான தினகரனின் இதயம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூலி வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது, விபத்தில் சிக்கியுள்ளார் தினகரன். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினகரன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று மூளைச்சாவு அடைந்தார். இவ்வுலக வாழ்க்கையை தங்களது மகன் தொடர முடியாது என்பதை அறிந்து துடித்தது பெற்றோரின் இதயம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/polic4344343.jpg)
அதேநேரம், பிறர் வாழ உதவும் வகையில், கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர் அந்த பெற்றோர். கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கே தானமாக வழங்கப்பட்டது. இதயத்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.வேலூர் முதல் சென்னை வரை 150 கி.மீ. தூரத்தில் மிகக் குறைந்த நேரத்தில் கடக்க வேண்டுமென திட்டமிடப்பட்டு, காவல்துறையிடம் உதவிக் கோரப்பட்டது. இதற்காக, அவர்கள் 'கிரீன் காரிடார்' திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டனர். மற்றொரு புறம், தினகரன் உடலில் இருந்து இதயம் முறையாகப் பிரித்தெடுக்கப்பட்டது. ஐ.சி.யூ. வகை ஆம்புலன்ஸ் மூலம் பிற்பகல் 03.00 மணிக்கு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது தினகரனின் இதயம்.
வேல்முருகன் என்பவர் ஓட்டிய அந்த ஆம்புலன்ஸில் மருத்துவர்களும், பாராமெடிக்கல் ஊழியர்களும், இரண்டு டெக்னீசியங்களும் இருந்தன. வழி நெடுகிலும் 'கிரீன் காரிடார்' செயல்திட்டம் மூலம் காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு இடையூறு இல்லாத வழியை அமைத்துக் கொடுத்தனர்.
தினகரனின் இதயத்தை தாங்கிப் பயணித்த ஆம்புலன்ஸ், சரியாக ஒன்றரை மணி நேரத்தில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை அடைந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)