Hearing today on the recruitment petition filed by Senthil Balaji's wife

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதே நேரம் மருத்துவமனை தரப்பிலிருந்து செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இந்த அறுவை சிகிச்சையானது காவேரி மருத்துவமனையில் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இந்த மனுவை விசாரிக்க உள்ளனர். அதேபோல் மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment