Hearing today in the petition against the governor

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைப்பெற்றார். தொடர்ந்து அவர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதனையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என கடந்த (17-03-24) அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதி இருந்தார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில், பொன்முடிக்கு அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், ‘அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என். ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.