/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3178.jpg)
கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் கடந்த 5-ஆம் தேதி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி அனிதா(27) என்ற பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனிதா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 07-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மெடிக்கல் உரிமையாளர் முருகன்(52) தலைமறைவானார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகனை தேடிவருகின்றனர்.
இந்நிலையில், ராமநத்தத்தில் முருகன் நடத்தி வந்த மெடிக்கலை கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ராமநத்தம் தனியார் கட்டடத்தில் மூன்று பெரிய அறைகள் கொண்ட கட்டடத்தை வாடகைக்கு எடுத்த முருகன் மருத்துவமனை போலவே நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும் மருந்தகம், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை, மினி ஆப்ரேஷன் தியேட்டர் செயல்பட்டதற்கான அறிகுறிகளும் ஆய்வில் தெரிந்தது. அதேசமயம் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பல மர்மமான முறையில் அங்கிருந்து எடுத்து சென்றிருப்பதும் தெரிந்தது. ஆய்வின் போது திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேபானந்தம், தொழுதூர் அரசு மருத்துவர் கொளஞ்சிநாதன் மற்றும் சுகாதாரத்துறையினர், ராமநத்தம் காவல் ஆய்வாளர் ஜெய்கீர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தலைமறைவாக உள்ள முருகனைக் கைது செய்தால் தான் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்பதால், அவரைத்தேடும் பணியில் ராமநத்தம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_932.jpg)
இதனிடையே இந்த கருக்கலைப்பு சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் கருக்கலைப்பு குறித்த ஆய்வினை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அதன்படி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று வேப்பூர், திட்டக்குடி, ராமநத்தம், மங்களூர் பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது மங்களூர் கிராமத்தில் ஒரு வீட்டில் வைத்து பெண்ணிற்கு கருக்கலைப்பு நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை. அதையடுத்து அங்கு சென்ற போது மங்களூர் சிவன் கோவில் தெருவில் உள்ள அன்பழகன் மகன் குமார்(48) என்பவரது வீட்டின் மாடியிலுள்ள அறையில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகிய இருவரும் 23 வயதுள்ள ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து உட்கார வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதேசமயம் ஆய்வுக்கு சென்ற மருத்துவ குழுவினரை பார்த்ததும் குமார் மற்றும் அவருடைய மனைவி சித்ரா ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் கைது செய்ய சிறுபாக்கம் உதவி ஆய்வாளர்க்கு மருத்துவத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற தம்பதியை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)