
தமிழ்நாட்டில் சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பள்ளியில் ஆசிரியரால் மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதாக வரும் செய்திகள் தான் பெற்றோர்களை கலங்க வைத்துள்ளது.
கடந்த வாரம் விராலி மலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த அடைக்கலம் என்பவர் விளையாட்டு போட்டிகளுக்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக 16 மாணவிகள் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் அடைக்கலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. திருமயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் 1098க்கு தொடர்பு கொண்டு, “எங்கள் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள்(58) எங்கள் தாத்த வயதில் இருந்துகொண்டு எங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். பொதுத்தேர்வு எழுத வேண்டிய நாங்கள் தற்போது மன உளைச்சலில் இருக்கிறோம்” என்று புகார் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மொத்த மாணவிகளிடம் தனித்தனியே நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இதில் 7 மாணவிகள் தங்களுக்கு நடந்த தொல்லைகளை சொல்லி அழும் போது விசாரணையில் இருந்த அலுவலர்களும் கண்கலங்கி மாணவிகளுக்கு ஆறுதல் கூறி உங்களுக்கு நாங்க பாதுகாப்பா இருப்போம் என்று அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தாத்தா வயது பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள் கைது செய்யப்பட்டு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும் போது தலையில் துணியை போட்டு மூடிக் கொண்டார். இதனிடையே சிறையில் கம்பி எண்ணும் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாளை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.