ADVERTISEMENT

மாணவ, மாணவிகளின் பெற்றோரைச் சந்தித்து தலா ரூ. 1,000 கொடுத்து உதவிய தலைமை ஆசிரியை... 

02:19 PM May 02, 2020 | rajavel

ADVERTISEMENT


தான் பணியாற்றி வரும் பள்ளியில் படித்து வரும் 62 மாணவ, மாணவிகளின் பெற்றோரை நேரில் சந்தித்து தலா 1,000 ரூபாய் வழங்கி உதவி செய்துள்ளார் தலைமை ஆசிரியை ஒருவர்.

ADVERTISEMENT

அரியலூர் மாவட்டம் துப்பாபு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 34 மாணவர்கள், 28 மாணவிகள் என மொத்தம் 62 பிள்ளைகள் படித்து வருகிறார்கள். இவர்களது பெற்றோர்கள் அனைவரும் ஏழை கூலி விவசாயத் தொழிலாளர்கள். அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர்கள்.

அந்த கிராம துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் கண்ணகி. இவர் பள்ளிப் பிள்ளைகளின் படிப்பு மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதேபோன்று ஊர் மக்களிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். இதனால் ஆசிரியை கண்ணகி மீது ஊர் மக்களுக்கு எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். பள்ளிக்கு வந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தோம், வீட்டுக்குச் சென்றோம், மாதம் தோறும் ஊதியம் வாங்கினோம் நம்மையும் நம் பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் காப்பாற்றினோம் என்ற சுயநலமிக்க சில ஆசிரியர்களுக்கு மத்தியில்தான் இந்த தலைமை ஆசிரியையும் இருக்கிறார். தான் பணி செய்யும் ஊரில் உள்ள மாணவ மாணவியின் பெற்றோர்கள் கரோனா பரவல் காரணமாகவும் வேலைக்குச் செல்ல முடியாமலும் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதையும் அவர்கள் படும் சிரமத்தையும் நேரில் கண்டறிந்தார் தலைமையாசிரியை கண்ணகி.

பள்ளியில் படிக்கும் 62 மாணவ மாணவியரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக தலா 1,000 ரூபாய் என ரூபாய் 62 ஆயிரம் வழங்குவது என்று முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீடுகளுக்கும் அவரே நேரில் சென்று பிள்ளைகளின் பெற்றோர்களிடம் பணத்தைக் கொடுத்தோடு மட்டுமல்லாமல் கரோனா நோய் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார்.

தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுப்பதோடு, வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்கு வழியில்லாமல் இருக்கும் கரோனா காலத்தில் உதவியும் செய்த ஆசிரியை கண்ணகிக்கு கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT