Skip to main content

24 ஆண்டாக வரிப்பணத்தை விழுங்கிய 'ஒரு மார்க்' தலைமை ஆசிரியர் மீது வழக்கு! போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது அம்பலம்!

Published on 21/03/2021 | Edited on 21/03/2021

 

Headmaster caught in fake certificate


காவேரிப்பட்டணம் அருகே, கணித பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றுவிட்டு, போலி சான்றிதழ்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (48). காவேரிப்பட்டணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக மாவட்டக் கல்வி அலுவலர் கலாவதிக்கு புகார்கள் சென்றன. 

 

அதன்பேரில், தலைமை ஆசிரியர் சங்கரின் அசல் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. அவர், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1990 & 1992ம் ஆண்டு பிளஸ்1, பிளஸ்2 படித்துள்ளார். பிளஸ்2 பொதுத்தேர்வில் 1200க்கு 307 மதிப்பெண்களும், கணித பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்ததும் தெரியவந்தது. 

 

இந்த மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து, அதை வைத்து ராணிபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பட்டய பயிற்சி முடித்துள்ளார். இந்த சான்றிதழ்களை சமர்ப்பித்து 1997ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, காவேரிபட்டணத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

 

இந்த மோசடி குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் கலாவதி, காவேரிபட்டணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விவகாரம் காவல்நிலையம் வரை சென்றதை அறிந்த தலைமை ஆசிரியர் சங்கர், திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர். கணிதத்தில் வெறும் ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றவர் 24 ஆண்டுகளாக அரசையும், மக்களையும் ஏமாற்றி ஆசிரியராக பணியில் இருந்திருப்பது பள்ளிக்கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

5 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
headmaster arrested under POCSO Act in Coimbatore

கோவையில் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம்  அப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடமும் தனது  செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் பிராங்க்ளின் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனிடையே பிராங்க்ளினை தலைமை ஆசிரியர் பதிலிருந்து பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.