Skip to main content

“மத்திய குழு சம்பிரதாய குழுவாக வந்து செல்லும்” -விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குற்றச்சாட்டு

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

The head of the Federation of Agricultural Associations the Central Committee of coming and going as a formal committee


புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு பார்வையிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அதிக மழை பெய்துவருகிறது. இதில், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. இதனால், குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

 

கடலூர் மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கு மேலான ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் மிக மிக குறைவான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக கூறிவருகின்றனர்.  கடன் வாங்கி விவசாயம் செய்துவரும் விவசாயிகள், விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர். மேலும் ஏழு மாவட்டங்களில் கடும் மழை காரணமாக பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி போயுள்ளது தண்ணீரில் முழுகிப்போன விவசாய நிலங்களுக்கு சம்மந்தப்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூபாய் 5,000 நிவாரண தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின்போது விவசாய விளை நிலங்கள் முழுகி, விவசாயிகள் பாதிக்கப்படும்போது மத்திய அரசு சார்பில் பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகளின் குழு பாதிக்கப்பட்ட இடங்களை சம்பிரதாயமாக பார்த்துவிட்டு செல்கிறது. விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துச் சொல்லும் பொழுது கவனமாக கேட்பதுபோல் கேட்டுவிட்டு டெல்லிக்குச் சென்று மிகக்குறைந்த அளவிலான நிவாரண தொகையை தமிழகத்திற்கு ஒதுக்குவதை மத்தியகுழு வாடிக்கையாக செய்து வருகிறது.  இது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. எனவே மத்தியகுழு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வரும்பொழுது வெளிமாநில விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்திலுள்ள விவசாய சங்கம் பிரதிநிதிகளையும் மத்திய குழுவுடன் இணைத்து பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணத் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

மேலும் மழை வெள்ளம் உள்பட பேரிடர் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படும்போது மிகக் குறைந்தபட்ச நிவாரணத்தொகை நிர்ணயித்து அந்தத் தொகையை மட்டும் தான் கொடுப்பதற்கு அரசாணை உள்ளது.  மத்திய அரசு 20 ஆண்டுகளுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட அந்த குறைவான நிவாரண தொகை வழங்கும் அரசாணையை ரத்து செய்து பாதிப்புகளுக்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கும் புதிய அரசாணையை மாநில அரசின் ஒப்புதலோடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஒவ்வொரு முறையும் மழை வெள்ள காலத்தில் தமிழக அரசு ஆயிரம் கோடி, 2,000 கோடி நிவாரணத்தொகை மத்திய அரசிடம் கேட்டு அறிக்கை அனுப்பும்போது அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு ஆயிரம் கோடி 2000 கோடி என கேட்ட தொகையில், ரூபாய் 200 கோடி தொகையை மட்டும் ஒதுக்குவதை மத்திய அரசு வாடிக்கையாக செய்து வருகிறது.  தமிழக முதல்வர் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்ட இந்த சமயத்தில் விவசாயிகள் கேட்கும் உரிய நிவாரண தொகைகளை மத்திய அரசிடமிருந்து வாங்கி கொடுப்பதற்கு உரிய அழுத்தமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்