Head constable who took video of women  suspended

கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பாலமுருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த பாலமுருகன் போக்கிரியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த மருத்துவமனை செவிலியர்களை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனையறிந்த அந்த பெண்கள் கத்தி கூச்சலிட பாலமுருகன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை விரட்டி பிடித்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலமுருகனின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பெண்களை வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், விரிவான விசாரணை செய்ய வேண்டும் என்று துணை ஆணையர் ஸ்டாலினுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், விரிவான விசாரணை நடத்திய காவல் ஆணையர் தலைமை காவலர் பாலமுருகனை பணியிட நீக்கும் செய்து உத்தரவிட்டுள்ளார்.