ADVERTISEMENT

''இப்ப கூப்பிட்டால் கூட வந்துவிடுவார்...'' - நினைவலையால் உருகிய கமல்!

05:47 PM Sep 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளன நிலையில், அவரது உடல் தற்பொழுது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீடியோ வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் எஸ்.பி.பி உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில், "என்னுடைய வெற்றி, தோல்விகளுக்கு பாராட்டுதல்களையும், தவறு இருபின் சுட்டிக்காட்டவும் செய்பவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.பி.பி. எப்படி என் சகோதரர்கள் சாருஹாசன், சந்திரஹாசன் ஆகிய இருவரும், நான் செய்யும் தவறின்போதும், பாராட்டுக்குரிய விஷயங்களின் போதும் தட்டிக் கொடுப்பார்களோ, அதேபோல் இவரும் தட்டிக் கொடுப்பார். எனக்காக அழுபவர்களில் இவரும் ஒருவர். என்னைப் பற்றி யாராவது புகழ்ந்து பேசினால் ஆனந்தக் கண்ணீர் விடுபவர்களில் ஒருவர் எஸ்.பி.பி. அவரை அழ வைக்க வேண்டும் என்றால் என்னைப் பற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.

அவர் ஒல்லியாகதான் இருந்தார். பின்னாட்களில் அவர் உடல் பெரிதானது. ஆனால் அவர் உடல் மட்டுமல்ல அவரது மனதும் பெரியது. நான் பாடும் பொழுது என் அருகில் இருந்து தவறைச் சுட்டிக்காட்டி மீண்டும் பாடச் சொல்வார்.

இப்ப கூப்பிட்டால் கூட வந்து விடுவார். அவர் என் உருவத்திலே கூட இருக்கிறார். இப்போது என் மொபைல் ஃபோனை எடுத்தால் கூட அவரைப் பார்க்க முடியும். அவரைப்பற்றி நிறைய ஆவணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் வெறும் பாடகராக மட்டும் இருந்துவிடக் கூடாது எனவேதான், அவரை நடிக்கவும் அழைத்தேன். எனக்காக தெலுங்கில் பின்னணிப் பேசியுள்ளார். அவருடனான எனது முதல் சந்திப்பு, 'ஆயிரம் நிலவே வா' தான். அந்தப் பாடலைப் பாடியவரை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது எளிதாக நடந்து விட்டது. உண்மையிலேயே நானும் அவரும் இந்த அளவுக்குப் பழகுவோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார் உருக்கமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT