
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ''திமுக ஆட்சியின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். நான் அரசியலிலே இல்லை. அரசியலை விட்டு விலகி ஏழு வருடங்கள் ஆகிறது. இன்னைக்கும் நான் சொல்கிறேன் நான் சாகுறவரை அரசியலில் எனக்கு குரு கலைஞர், சினிமாவில் எனக்கு குரு பாரதிராஜா தான். அதை எப்பொழுது மாற்ற முடியாது. அரசியலுக்கு நான் இனி வரவே மாட்டேன். உலகத்திலேயே பெரிய தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துட்டேன், எம்பியாக இருந்துட்டேன், இந்தியாவிற்கே மந்திரியாக இருந்தேன். இப்பொழுது குடும்ப சூழ்நிலை, குழந்தையின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதற்காக அங்கே சென்று விட்டேன்.
பகலில் என் மனைவி குழந்தையை பார்த்துக் கொள்வார். நான் இரவில் பார்த்துக்கொள்வேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற வாய்ப்பு குறைவு. சினிமா துறையில் கூட படங்களில் நடிப்பதை நான் தவிர்த்து வருகிறேன். வருடத்திற்கு 10 படங்கள் கேட்கிறார்கள். ஆனால் நான் ஒத்துக் கொள்வதில்லை. வருடத்தில் ஏதாவது ஒரு படம் ஒப்புக்கொள்கிறேன். காரணம் சினிமாவை விட்டு விலகி இருக்கக் கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்ததிலிருந்து விவசாய குடும்பம். எனக்கு ரொம்ப நாளாக ஆசை அமெரிக்காவில் விவசாயம் பண்ண வேண்டும் என்று. அதற்கான இடம் அமையவே இல்லை கடந்த ஆண்டு 300 ஏக்கர் இடம் வாங்கினேன். அதில் தான் இப்பொழுது விவசாயம் தொடங்கி இருக்கிறேன். வீட்டிற்கு தேவையான காய்கள் அனைத்தையும் நானே விளைவித்துக் கொள்கிறேன்'' என்றார்.