Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வேன் மூலம் சிதம்பரம் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை 15 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இது பிரச்சாரம் கூட்டம் போல் தெரியவில்லை. வெற்றி விழா போல் உள்ளது.

இங்கே வரும்போது ஒரு நல்ல செய்தியோட வந்துள்ளேன் 30ந்தேதி மாலை பானை சின்னம் விசிகவுக்கு உறுதியாகிவிட்டது. ஒன்றிய பாஜக அரசு அவர்களுடன் கூட்டு வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன சின்ன வேண்டுமானாலும் கொடுத்துள்ளார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னத்தை கொடுக்க முடியாது என்கிறனர். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர்கள், வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் வாதாடி பானை சின்னத்தை பெற்றுள்ளார்கள். பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்''என்றார்.

Advertisment

'வாக்களிக்க அனைவரும் முடிவெடுத்து விட்டீர்களா?'என பொதுமக்களை பார்த்து கேட்க அனைவரும் 'முடிவெடுத்து விட்டோம்' என சத்தமாக கூறினார்கள். உங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்கும் போது பானை சின்னம் தான் தெரியும் தெரிய வேண்டும். அதில் நீங்க அழுத்துற பொத்தான் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும்.கடந்த முறை திருமாவளவன் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 3 லட்சத்திற்கும் குறையாமல் அவர் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் பானை சின்னம் அவரை தர மறுத்ததால் இந்த செய்தி இந்திய அளவில் பரவியுள்ளது. இது எப்படி வாங்கினார்கள் என்ற விவாதம் தொலைக்காட்சிகளில் வைரல் ஆகி வருகிறது. இந்த விளம்பரமே போதும் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் 15 கோடியில், தேரோடும் வீதியில் 10 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்படுகிறது, பெரியண்ணா குளம், ஞானபிரகாச குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. ரூ 143 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ47 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2.5 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. 42 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளது. சாதனைகள் சிதம்பரம் நகரத்தில் முக்கிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ 23 கோடியில் விரைந்து நடைபெற உள்ளது. இதுவெல்லாம் நாம் செய்த சாதனைகள்.

Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

Advertisment

திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். இவரை சில அரசியல் புரோக்கர்கள் திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என கூறினார்கள் அவர் இது தான் கொள்கை கூட்டணி என உறுதியோடு இருந்தார். பாஜக கூட்டணி தான் கொள்ளை கூட்டணி. நான் மிகப்பெரிய வெற்றியாக கருதுவது அண்ணன் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றியை தான்.

மகளிர் தான் அரசு பேருந்துகளின் உரிமையாளர்கள் அவர்கள் எங்க நிறுத்தினாலும் நிறுத்தி ஏறி கொள்கிறார்கள் 3 வருடத்தில் 450 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். ரோஸ் கலர் பேருந்துகளை அவர்கள் ஸ்டாலின் பேருந்து என கூறுகிறார்கள். கட்டணம் இல்லா பேருந்து அது உங்களின் உரிமை.பெண்கள் பள்ளிக்கு மட்டும் போகாமல் கல்லூரிக்கு போய் பட்டங்களை பெற வேண்டும். அதற்காக புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி மாதம் ரூ 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறுகிறார்கள். மீதி விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படும். அந்தத் துறைக்கும் நான்தான் அமைச்சர் உறுதி அளிக்கிறேன். ஆனால் நீங்க எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 5 ஓட்டுகளும் கண்டிப்பாக பானை சின்னத்திற்கு கிடைக்க நான் உறுதி ஏற்றுக் கொள்கிறேன் என உறுதி அளிக்க வேண்டும்.

நான் பிரச்சாரம் மேற்கொண்டது ஒரு ட்ரெய்லர் தான் ஆனால் வரும் 6 ஆம் தேதி இங்கு தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டு பாசிச மோடி அரசு பற்றியும் கழக ஆட்சி என்னென்ன திட்டங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பேசுவார்'' என்றார்.