'Has the chief minister who hoisted the war flag on that day forgotten it now?'-BJP Annamalai

நேற்று தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுவர். இதனால் 2356.67 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்தமுறை பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தர்மபுரியில் பல இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அரசின் அறிவிப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. விவசாயிகளும் பொங்கல் தொகுப்பில் கரும்பைச் சேர்க்க வேண்டும் மேலும் ரொக்கம் 5000 ரூபாய் பொங்கல் பரிசாக அறிவிக்க வேண்டும் என' வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 'பொங்கல் தொகுப்பில் பனை வெல்லத்துடன் கருப்பு வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார். 'தமிழகத்தில் உள்ள 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசு; ஆட்சிக்கு வருவதற்கு முன் பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கிய முதல்வர் இப்போது அந்த அறிக்கையை மறந்து விட்டார் போல. அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனைவெல்லம் வழங்கதமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்' என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisment