Skip to main content

''மோசடி பணத்தை கொடுத்தே பாஜகவில் பதவி'' - அதிர்ச்சி கொடுத்த ஹரீஷின் வாக்குமூலம்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Harish's shocking confession that he got the position in BJP by paying fraudulent money

 

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

 

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

 

அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கும் மோசடியில் தொடர்பிருப்பதாக ரூசோ வாக்குமூலம் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவானதாகத் தகவல் வெளியானது.

 

இந்நிலையில், ஆருத்ரா நிறுவன மோசடியில் கைதான ஹரீஷ் தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பணம் கொடுத்ததன் காரணமாக ஹரீஷ் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். அந்தப் பொறுப்பை பெறுவதற்கு பாஜகவை சேர்ந்த சிலருக்கு மோசடி பணத்திலிருந்து பங்கு கொடுத்தது தெரியவந்தது. இதன் காரணமாக பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அலெக்ஸ் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாகவும், சுதாகர் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகியாகவும் உள்ளனர். கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் ஹரீஷை 11 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

 

மேலும் விசாரணையில் ஆருத்ரா நிறுவனத்திற்காக காஞ்சிபுரம் பகுதியைச சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து 84 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இந்த 84 கோடியை வசூலித்து தந்ததற்கு ஹரீஷுக்கு ஆருத்ரா நிறுவனத்தின் தரப்பில் இருந்து ரூபாய் 130 கோடி தரப்பட்டது தெரியவந்துள்ளது. ஹரீஷ் தன் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் 15 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருப்பதும், 'ஒன் மேன் குரூப்ஸ்' என்ற பெயரில் தொழில் தொடங்கியதும் தெரியவந்துள்ளது. ஹரீஷ் பயன்படுத்திய செல்போன், கார் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்