
மதுரை சிறை ஜெய்லர் மீது பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ள நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி மதுரை மத்தியச் சிறையில் உதவி ஜெய்லராக பணியாற்றி வரும் பாலகுருசாமியை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் மதுரை ஆரப்பாளையம் அருகே நடுவீதியில் வைத்து பெண் ஒருவர் பாலகுருசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
சம்பவத்தின் பின்னணியில் வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று விடுதலையான நபர் தன்னுடைய மகளுடன் மதுரையில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த கடைக்கு மதுரை மத்திய சிறையில் உதவி ஜெய்லராக பணியாற்றி வரும் பாலகுருசாமி அவ்வப்போது சாப்பிட வந்து சென்றுள்ளார். அவர்களுக்கு உதவி செய்வதாக கூறி கடைக்காரரின் மகளிடமும் பேசி வந்துள்ளார். இச்சூழ்நிலையில் பாலகுருசாமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பெண் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் தந்தையாகிய இருவரும் சாலையில் வைத்து பாலகுருசாமியை தாக்கியதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலகுருசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாலகுருசாமியை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.