'ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு பாமகவின் அன்புமணி வரவேற்றுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன்  சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பில் இருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. அதனால், தமிழகத்தில் இரு முறை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டும் அதனால் பயன் இல்லை. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவை சூதாட்டம் அல்ல, அவை திறன் விளையாட்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த சூதாட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திமுக அரசு இன்னும் விசாரணைக்கு கொண்டு வராததால்,  ஆன்லைன் சூதாட்டங்களையும் தடுக்க முடியவில்லை; அதனால்  நிகழும் தற்கொலைகளையும் தடுக்க முடியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் 96 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றையும் சூதாட்டம் என்று அறிவித்து அவற்றை தடை செய்வதற்கான சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவையிலும் நிறைவேற்றுவதுடன், உச்சநீதிமன்றத்திலும் பாதுகாக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும்,  பலர் தற்கொலை செய்து கொள்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.