happened to the woman who was walking on the road

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள வெள்ளித்திருப்பூர், காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(55). இவரது மனைவி பிரேமலதா(52). இவர் கடந்த 2 ஆண்டுகளாக குருவரெட்டியூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கண் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் பிரேமலதா குருவரெட்டியூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து வெள்ளி திருப்பூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் செல்வதற்காக தனது மொபட்டிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது குரும்பபாளையம் அருகே பிரேமலதா சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் 4 மர்ம நபர்கள் சென்றனர். அவர்கள் 4 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

Advertisment

மன்னா தீசுவரன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வளைவில் பிரேமலதா திரும்பிய போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களில் ஒருவர் திடீரென பிரேமலதா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்து அறுத்துக் கொண்டு தாங்கள் வந்த பைக்கில் தப்பி சென்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரேமலதா இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிரேமலதா வெள்ளி திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment