
தொடர் மழை காரணமாக ஏற்படும் நோய் தொற்று அபாயத்திலிருந்து காக்க மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், மழைக்காலங்களில் மக்களுக்கு இயற்கையாக வருகிற நோய்களான காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு என பல்வேறு உபாதைகளிலிருந்து மக்களை காப்பாற்றத் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல் படி மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிசை பகுதிகளில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு அரைகிலோ என்ற வகையில் ப்ளீச்சிங் பவுடர் தருகிற பணி இன்று துவங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் நான்கு லட்சத்திற்கு அதிகமான க்ளோரின் மாத்திரைகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.