/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2974_1.jpg)
மதுரையில் கண்மாயில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் மர்மம் விலகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் விமான நிலையம் செல்லும் வழியில் உள்ள ஈச்சனேரி கண்மாய் அருகே நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது. பாதி எரிந்த நிலையில் முகம் முழுவதும் சிதைந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். அங்கு பதிந்த வாகனத்தின் டயர் அச்சுகளை வைத்தும், மோப்பநாய் உதவியுடனும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட அந்த நபர் தனிப்படை காவலர் என்பது தெரியவந்தது. விருதுநகரை சேர்ந்த மலையரசன் சிவகங்கை காளையார்கோவில் தனிப்படை காவலராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் அவர் அங்கு சடலமாக கிடந்தது தெரியவந்தது.
சடலமாக கிடந்த காவலரின் மனைவி அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி காயத்துடன் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் மனைவி உயிரிழப்பு தொடர்பான ஆவணங்கள், பில்களை பெறுவதற்காக காவலர் மலையரசன் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஈச்சனேரி கண்மாயை ஒட்டிய பகுதியில் மலையரசன் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். உயிரிழந்து யார் என கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் இது கொலையா அல்லது தற்கொலையா எனத் தெரியாமல் மர்மமே நீடித்து வந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3051_1.jpg)
கொலையான காவலர் மலையரசன்
இந்நிலையில் போலீசார் விசாரணையில் இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவி உயிரிழந்த சோகத்தில் அனுமதி விடுமுறையில் இருந்த காவலர் மலையரசன் பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மனைவி மருத்துவமனையில் இருந்தேபோது அடிக்கடி ஆட்டோவில் சவாரி செய்த காவலர் மலையரசனுக்கு வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தமூவேந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த மலையரசன் ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரனுடன் பெருங்குடி அருகே உள்ள பைபாஸ் சாலையில் காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3053_0.jpg)
சுட்டுப் பிடிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன்
அப்பொழுது காவலர் மலையரசனிடம் இருந்து கூகுள் பே ஆப் மூலம் பணத்தை பறிக்க ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரன் முயன்றுள்ளார். இதில் ஆட்டோ ஓட்டுநர் முவேந்திரன் மலையரசனை தலையில் அடித்துக் கொலை செய்து பின்னர் எரித்து ஈச்சனேரி கண்மாய் அருகே வீசிச் சென்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டுநர் மூவேந்திரனை கைது செய்வதற்காக போலீசார் சென்றபோது சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன் என்பவரை கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்க, உடனடியாக காவல்துறையினர் மூவேந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். மூவேந்திரன் ராஜாஜி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Follow Us