H. raja who had a dispute with the DSP

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் சக்திவேல். ஒப்பந்தப் பணிகளும் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாலைப் பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றியசேர்மன் திமுக மகேஷ்வரியின் கணவர் சண்முகநாதனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தன்னை சேர்மன் கணவர் சண்முகநாதன் தாக்கி கொல்ல முயற்சி செய்தார் என்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்று விசாரணைசெய்து வருகின்றனர். அதே போல பா.ஜ.க. நிர்வாகி சக்திவேல் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும்,அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும்ஒன்றியசேர்மன் திமுக மகேஷ்வரி சண்முகநாதன் அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் குறித்தும் போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி சக்திவேலை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கட்சி நிர்வாகிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று ஒன்றியசேர்மன் மகேஷ்வரியின் கணவர் சண்முகநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகை போராட்டத்திற்கு தயாராகி முழக்கங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு வந்த அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார் எச்.ராஜாவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment

அப்போது, “இருதரப்பு புகார்களுக்கும் மனு ரசீது கொடுத்தாச்சு. புலனாய்வு நடக்கிறது. நடவடிக்கை எடுக்கிறோம்” என்று டிஎஸ்பி கூறியதற்கு, “சக்திவேல் மீது கேஸ் போடக்கூடாது” என்று எச்.ராஜா மறுத்துள்ளார். “யார் புகார் கொடுத்தாலும் மனு ரசீதுபோடச் சொன்னது நீங்க தானே சார்” என்று டிஎஸ்பி சொல்ல, “சக்திவேல் மேல் கேஸ் போடுவேன்னு அமித்ஷாஜியையே மிரட்டுறதா?” என்று எச்.ராஜா டிஎஸ்பியிடம்கேட்க, “இதை ஏன் சார் அங்க முடிச்சு போடுறீங்க?”என்றார் டிஎஸ்பி. இதற்கு எச்.ராஜா, “அவர்தானேஉங்க அமைச்சர்” என்று எகிறினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போது சேர்மன் நாற்காலியில் மகேஷ்வரிக்கு பதிலாக அவரது கணவர் சண்முகநாதன் அமர்ந்து கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது பழ.சக்திவேல் மீது தாக்கி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எஸ்.பி, டிஜிபி அலுவலகம் வரை சென்று போராடுவோம் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.