பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்து வருபவர் எச். ராஜா. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலை பெரியார் சிலை உடைப்பேன் என எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி இன்று (02.12.2024) தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “இந்த இரண்டு வழக்குகளிலும் எச். ராஜா குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வழக்கிற்கும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது” எனப் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.