சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்! போக்சோ, குண்டாஸ் பாய்ந்தன!

The gym master who made the little girl pregnant! Pocso act

தர்மபுரி பள்ளி மாணவியைக்காதலிப்பதாக சொல்லிகர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருந்த நிலையில், தற்போது அவர் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (25). பெங்களூருவில் பொம்மனஅள்ளி பகுதியில் ஜிம் மாஸ்டராக பணியாற்றினார். இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். தர்மபுரி மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த, அரசுப்பள்ளியில் படித்து வந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நரசிம்மனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தனர்.

இந்த நட்பு நாளுக்கு நாள் காதலாக வளர்ந்துள்ளது. காதலிப்பதாக சொல்லிநரசிம்மன், அந்தச் சிறுமியை கடந்த 2020 அக்டோபர் மாதம் 5ம் தேதி தர்மபுரியில் இருந்து கடத்திச்சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தர்மபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். ஆனால் நரசிம்மன், சிறுமி ஆகியோர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு பிரசவம் என்பதால், அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரின் கணவர், குடும்பம் பற்றி விசாரித்துள்ளனர். அந்தச் சிறுமி காதலிப்பதாக சொன்னவரால்ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து தர்மபுரி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்த தர்மபுரி காவல்துறையினர், சிறுமி மற்றும் குழந்தையை மீட்டு வந்து, தர்மபுரியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் நரசிம்மன் பற்றி விசாரித்த காவல்துறையினர் அவரை பிடிக்க தனிப்படை அமைத்தனர். செல்போன் சிக்னல் மூலம் நரசிம்மனின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஸ்லாபூர் கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர் இஸ்லாபூர் விரைந்தனர். நரசிம்மனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே பெங்களூருவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, அந்தப் பெண்ணை வேண்டாம் என விரட்டியடித்ததும், இரண்டாவதாக மற்றொரு பெண்ணை காதலித்து விலகி வந்ததும்தெரிய வந்தது.

இந்நிலையில்தான், தர்மபுரி சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். சிறுமியை கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே அழைத்துச்சென்று விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியதும், அவருடன் பாலியல் உறவு கொண்டதும் தெரிய வந்தது. இந்த நெருக்கத்தால்தான் சிறுமி கர்ப்பமுற்றிருக்கிறார்.

நரசிம்மன் வேலை இல்லாமல் இருந்ததால், செலவுகளுக்காக செல்போன், மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று வந்துள்ளார். இவர் மீது திருப்பதி, நெல்லூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, சிறுமியை கர்ப்பமாக்கியதாக அவரை தர்மபுரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்ட எஸ்பி கலைச்செல்வன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நரசிம்மனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மார்ச் 26ம் தேதி, குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

dharmapuri incident police
இதையும் படியுங்கள்
Subscribe