Skip to main content

கர்நாடகாவிலிருந்து திருச்சிக்கு வந்த குட்கா பொருட்கள்! மடக்கிப் பிடித்த தமிழ்நாடு போலீஸ்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Gutka products arrived in Trichy from Karnataka! Tamil Nadu Police

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டன் குட்கா பொருட்களையும் மூன்று கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 

கர்நாடகா மாநிலம், பெங்களூரிலிருந்து சமயபுரம் பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் (லால்குடி பொறுப்பு) சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், முத்துசாமி, முதல் நிலை காவலர் செயலரசு, காவலர்கள் தமிழரசன், பாண்டியராஜன், பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது அந்த வழியாக வந்த மூன்று கார்களை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் ஒரு டன் எடையுள்ள ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் நடுத்தெருவைச் சேர்ந்த இளையராஜா (41), தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34), ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபால் சிங் (36), கர்நாடக மாநிலம் பெங்களூர் மகடி ரோட்டைச் சேர்ந்த அமீர் சிங் (38) ஆகியோர் குட்கா பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

 

பின்னர் பிடிபட்ட நான்கு பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  மேலும், கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இளையராஜா நடத்தி வரும் டீக்கடையில் வைத்து பல்வேறு பகுதிகளுக்கு இவர்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதில் மணிராஜ் மீது ஏற்கனவே சிறுகனூர் காவல் நிலையத்தில் குட்கா கடத்தியதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.