
மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து வந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், 2014 ஆம் ஆண்டு சந்தையில் கிடைப்பதாக பேரவை நடந்த பொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்து வந்தார். இது தொடர்பாக உரிமை குழு நடவடிக்கை எடுத்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 திமுக எம்எல்ஏக்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனுப்பப்பட்ட நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருப்பதாக கூறி நோட்டீசை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீசையும் தள்ளுபடி செய்து தனி நீதிபதி கிருஷ்ணா சத்திய நாராயணன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், உரிமை குழு நடவடிக்கை செல்லும் எனவும் ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட வேண்டும் என 2021 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின், அதேபோல் திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற கு.க.செல்வம் உள்ளிட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு ஒரு வருடமாக நிலுவையில் இருந்த நிலையில் பேரவைசெயலாளர் மற்றும்உரிமை குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த மேல்முறையீடு வழக்கை விசாரிக்க வலியுறுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)