
சேலத்தில் கொலை, வழிப்பறி குற்றங்களில் தொடர்புடைய இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் எருமாபாளையம் முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவுதம். இவர் ராசி நகர் பிளாட் அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2100 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
காவல்துறை விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் களரம்பட்டி வீரவாஞ்சி தெருவைச் சேர்ந்த காந்தி மகன் கண்ணன் என்கிற போண்டா கார்த்தி (23), கிச்சிப்பாளையம் காளிகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் தமிழ் என்கிற தமிழரசன் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் இதே காவல்நிலையத்தில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணன் என்கிற போண்டா கார்த்தி, தமிழரசன் ஆகிய இருவரும் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதோடு, குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் லாவண்யா மாநகர ஆணையருக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கைது ஆணை அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.