ADVERTISEMENT

திருவாடுதுறை ஆதின பகுதியில் துப்பாக்கிச் சூடு -இருவர் படுகாயம்

03:29 PM May 06, 2019 | selvakumar

ஆதினங்களோ அல்லது ஆதீனத்தில் பணியாற்றுபவர்களோ ஏதாவது சிக்கல்களில் சிக்கி சர்ச்சையாக்குவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திருவாடுதுறை ஆதீனத்தின் மெய்க்காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள திருவாடுதுறையில் உள்ளது ஆதீனம். தொன்மை வாய்ந்த இந்த ஆதீனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துக்கள் நிலங்களாகவும், மலைகளாகவும், தோட்டங்களாகவும், கட்டிடங்களாகவும் உள்ளன. இந்த சொத்துக்களுக்காக ஆதினங்களாக இருப்பவர்களுக்குள் கோஷ்டி யுத்தங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்தன.

இந்த சூழலில் திருவாடுதுறை ஆதீனத்தின் தற்போதைய 24-வது குருமகா சன்னிதானமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவருக்கு மெய்க்காவலராக நாகப்பட்டிணம் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ஜெகன்ராஜா என்பவரை தமிழக காவல்துறை நியமித்துள்ளது.

ஜெகன்ராஜா திருவாடுதுறை கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் பெண்மணி ஒருவரிடம் சில காலமாக பேசி வந்துள்ளார். இந்தநிலையில் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் அக்கடைக்கு வந்த காவலர் ஜெகன்ராஜா அந்த பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இதைக்கண்ட திருவாவடுதுறை, மேலவீதியைச் சேர்ந்த மதி என்பவர் அந்தபெண்ணிடம் காவலர் ஜெகன்ராஜா பேசுவதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைக்கண்ட ஜெகன்ராஜா மதியின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அடித்து விரட்டியுள்ளார். மதியோ தனது செல்போனை திரும்பத்தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார், காவலர் ஜெகன்ராஜாவோ செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். கோபமான மதி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கையில் வைத்துக்கொண்டு செல்போனை கேட்டுள்ளார்.

இதனைக்கண்டு கோபமடைந்த காவலர் ஜெகன்ராஜா, மதியின் இடதுகாலில், ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைக்கண்ட அந்த கிராமத்தை சேரந்த நாட்டாமை செல்வராஜ் ஒடிவந்து காவலரை தட்டிக்கேட்க, அவரையும் காலில் சுட்டிருக்கிறார். இடது காலில் பாய்ந்த குண்டு காலை துளைத்துக்கொண்டு வலது காலிலும் பாய்ந்தது. அந்த சம்பவத்தை பார்த்து ஒடிவந்த திருவாடுதுறை சப்பாணித் தெருவைச் சேர்ந்த மதிவாணன் என்பவரையும் துப்பாக்கியைக் கொண்டு தாக்கியுள்ளார்.

தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதைக் கேட்டு, அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, அவர் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஆத்திடமடைந்த பொதுமக்கள் காவலர் ஜெகன்ராஜாவின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மதி, செல்வராஜ் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த தகவலறிந்த குத்தாலம் போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுத்து திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் ஜெகன்ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT