சென்னையில் போலீஸ்காரரை தாக்கியவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாண்டிபஜார் காவல் நிலைய முதல்நிலை காவலர் கார்த்திகேயன், கடந்த 13-ந்தேதி இரவு ரோந்துபணியில் ஈடுபட்டார். அப்போது, சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த முகம்மது அக்பர், முகமது நவ்ஷத் ஆகியோர் அந்த பகுதியில் திருநங்கைகளிடம் பாலியல் தொழில் தொடர்பாகதகராறு செய்து கொண்டிருந்தனர்.

 “The gundar act was on the attackers of the police

Advertisment

அப்போது, போலீஸ்காரர் கார்த்திகேயன் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியிருக்கிறார். மதுபோதையில் இருந்த 4 பேரும் கார்த்திகேயனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். மேலும், போலீஸ்காரரிடம் இருந்த வாக்கி டாக்கியையும் பறித்து உடைத்து விட்டனர். இதையடுத்து, மற்ற போலீஸார் வந்து கார்த்திகேயனை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 4 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அடி வாங்கிய போலீஸ்காரர் கார்த்திகேயனை ஜே.சி டீமிற்கு இடமாற்றம் செய்து அனுப்பினார் உதவி ஆணையர் கோவிந்தராஜ். அதேபோல், 4 பேரையும் ரிமாண்டிற்கு அனுப்பிய பாண்டி பஜார் போலீஸ்காரர்கள் 4 பேரையும் உதவி ஆணையர் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். அதாவது, போலீஸாரை தாக்கிய இளைஞர்கள் 4 பேரையும், இவர்கள் அடித்து துன்புறுத்தினார்களாம். அதனால், உதவி ஆணையர் கோவிந்தராஜ் 4 பேரையும் எச்சரித்து அனுப்பி உள்ளார்.

மேலதிகாரிகளின் இந்த செயலால் கொந்தளித்த காக்கிகள், கார்த்திகேயன் அடிவாங்கும் வீடியோவை 2 நாட்களுக்கு முன்னர்வெளியிட்டனர். இதையடுத்து, சிறைக்காவலில் உள்ள 4 பேர் மீதும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு நகல் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாக 21-ந்தேதியே நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.