Advertisment

சேலம் மலைக்கிராமங்களில் துப்பாக்கி வேட்டை; எஸ்பி தீபா கனிகர் எச்சரிக்கை!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகுட்டை மடுவு வனப்பகுதியில் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, சட்ட விரோதமாக துப்பாக்கி தயாரிக்கும் தொழில்கூடம் இயங்கி வந்ததை காவல்துறை மற்றும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

Advertisment

அங்கிருந்து, நாட்டுத்துப்பாக்கி தயாரிப்புக்குத் தேவையான அடிக்கட்டைகள், இரும்புக்குழாய்கள் கைப்பற்றப்பட்டன. என்றாலும், துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இச்சம்பவம் நடந்த இரு நாள்களில் அந்த தொழிற்கூடம் இயங்கி வந்த கொட்டகையை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிட்டனர்.

Gun hunting in Salem hills; SP Deepa  Warning

இதற்கிடையே கருமந்துறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாகவும், பலர் உரிமம் பெறாமலேயே துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும் சேலம் மாவட்ட போலீஸ் எஸ்பி தீபா கனிக்கருக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

இதையடுத்து, ஏடிஎஸ்பி அன்பு, டிஎஸ்பிக்கள் சூரியமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. வனத்துறையினர், வருவாய்த்துறையினரும் இந்தக்குழுக்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

சட்ட விரோத துப்பாக்கி தயாரிப்பு கும்பலை வேட்டையாட களமிறங்கிய இக்குழுவை எஸ்பி தீபா கனிக்கர் நேரடியாக வழிநடத்தினார். புதன் கிழமை (ஜூன் 12, 2019) அதிகாலையிலேயே கருமந்துறை சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் அதிரடி வேட்டை நடத்தினர். இப்பணியில் மொத்தம் 70 காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ஈச்சங்காட்டில் இருந்து கருமந்துறை வழியாக ஒரு குழுவும், தேக்கம்பட்டு வழியாக ஒரு குழுவும் வெங்காய குறிச்சி வழியாக ஒரு குழுவும் என 3 குழுவினர் தேடுதல் வேட்டையைத் துவக்கினர். இந்தப்பகுதியில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில், முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அப்போது எஸ்பி தீபா கனிகர் அங்கிருந்த பொதுமக்களிடம் கூறுகையில், ''அனுமதியின்றி துப்பாக்கி தயாரிப்பதோ, வைத்திருப்பதோ கூடாது. அவ்வாறு துப்பாக்கிகள் வைத்திருப்போர் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்து விடுங்கள். உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம். காவல்நிலையத்தில் நேரில் வந்து ஒப்படைக்க பயமாக இருந்தால், கோயிலில் வந்து வைத்துவிட்டுச் சென்று விடுங்கள்.

இதற்குப் பிறகும், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் குறித்தும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்,'' என்றார்.

Warning forest Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe