
அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுவதாக பெண்கள் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வச்செயல். காவனூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். சும்மா இருபது வயசு பெண்கள் டார்கெட் பண்ணி லவ் டார்ச்சர் கொடுத்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் அவருடைய குறிக்கோள். ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்களை தேடித் தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது. என்னை சுற்றி வழக்கு ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதைத் தெரிந்து கொண்டு வழக்கறிஞர் என சொல்லி என்னிடம் வந்து டார்ச்சர் செய்தார்.
திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். எனக்கு யாருடைய சப்போர்ட்டும் கிடையாது. அப்பா அம்மா மட்டும்தான் எனக்கு சப்போர்ட். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு உள்ளே வந்து டெய்லியும் டார்ச்சர் செய்து கட்டாயமாக கல்யாணம் செய்தார். இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டுத் துண்டாக வெட்டிடுவேன். வரும் வழியிலேயே உன்னை காரை ஏற்றி கொலை செய்து விடுவேன். என்கிட்ட கார் இருக்கு என என்னென்னமோ பேசி மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து திமுகவிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டிருந்தார். அதேபோல நேற்று தெய்வச்செயலும் அவருடைய மனைவியும் உயர் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற்றிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அப்பெண், காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாகவும், கண்ணிய குறைவாக நடத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய புகார் குறித்து மனு அளிப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார். ஆனால் உரிய நேரம் ஒதுக்கப்படாததால் அவர் நுழைவாயில் முன்பு காத்துக் கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரிடம் அறிவுறுத்தி அங்கிருந்து அவரை அருகில் உள்ள வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.