/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_906.jpg)
"ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு வருடத்திற்கு வழங்க முடியாது" என்ற தமிழக அரசின் அறிவிப்பு அரசுத் துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் காவல் துறையினர் மத்தியில் பெரிய வருத்தத்தையும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் அரசுத் துறையினர் அனைவரும் 50 விழுக்காடு எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் கணக்கில்லாமல் விடுப்பில் உள்ளனர் மற்றும் ஆசிரியர்கள் 2020 ஆம் வருடம் முழுவதும் வீட்டிலிருந்தனர். 2021 ஆம் வருடமும் அதே நிலைமை தொடர்கிறது. ஆனால் அவர்களுக்கும் சம்பளம் மற்ற அனைத்து சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது.
ஆனால், காலை முதல் மாலை வரை ஊரடங்கை அமல்படுத்த வெயிலிலும் மழையிலும் ரோட்டில் நின்று கொண்டிருக்கும் காவலர்களுக்கும் அதே நிலைதான். இதை விட என்ன பெரிய கொடுமை என்றால், முறையாகக் கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு கிடைக்காமல் நிறையக் காவலர்கள் தவிப்பில் உள்ளனர். சாலையிலேயே கால்கடுக்க நின்று பணியைச் செய்தாலும் தங்களது ஊதிய உயர்வைக் கூட கேட்டுப் பெறும் நிலையிலேயே காவலர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய பணியாளர்கள் கணக்கே இல்லாமல் விடுப்பில் உள்ளனர். குறிப்பாகச் சென்னை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் நிலைமை இன்னும் மோசம்.
"ரோட்டில் தினம் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கும் அதே பலன்கள், வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கும் அதே பலன்கள், என்ன அற்புதம்" என மன வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ உதவியாளர்கள் என அனைவருக்கும் அரசு சமீபத்தில் ஊக்கத்தொகை அளித்தது. இது பாராட்டக்கூடிய விஷயம். ஆனால், காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, காவல்துறையினருக்கு ஒரு பாராட்டு கூட அறிவிக்கவில்லையே என்ற மனவேதனையில் உள்ளனர்.
ஊக்கத்தொகையும் வேண்டாம் பாராட்டுதலும் வேண்டாம் மற்ற அரசாங்கப் பணிகளைப் போல நாங்களும் 50 விழுக்காடு பணி செய்ய அனுமதிக்க வேண்டும், இல்லையேல் சொந்த விடுப்பில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காவலர்கள் மத்தியில் குரல் ஓங்கி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)