திருச்சி மாநகரின் சில முக்கியப் பகுதிகளில், மேம்பாலங்களின் கீழ் பகுதி போன்ற இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கிறது. இவ்விடங்களைத் தேர்வுசெய்து வழிப்பறி கொள்ளையர்கள், அவ்வழியாகச் செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்ஃபோன், பணம் போன்றவற்றை வழிப்பறி செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்துவருகிறது. இதுதொடர்பான பல்வேறு புகார்களும் காவல்துறைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இவ்வழிப்பறி கொள்ளைகளைத் தடுக்க காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் இரு இளைஞர்கள் கத்தியைக் காட்டி செல்ஃபோனைப் பறிக்க முயற்சித்துள்ளனர். இதனை சிசிடிவி மூலம் கண்காணித்த காவல்துறையினர்,ரோந்துப் பணியிலிருந்த காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் ராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பதும், மற்றொருவர் அரியலூர் செந்துறை பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பதும் தெரியவந்தது.
இதேபோல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் சில இளைஞர்கள், கத்திமுனையில் ஒருவரை மிரட்டி செல்ஃபோனை பிடுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த காவலர்கள், அவர்களைப் பிடித்தனர். இச்சம்பவத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ஜெகதீஸ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிப்பட்ட ஐந்து இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.
Follow Us