Guards Againts setting up perimeter wall in NLC solar panel area! MLA compromise!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கொல்லிருப்பு கிராமத்தில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சோலார் பேனல்மூலம் 25 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைச் சுற்றி இரும்பு முள் வேலிகள் அமைக்கப்பட்டு, 46 பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இரும்பு முள்வேலிகளை அகற்றி விட்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்று 46 காவலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

தகவலறிந்து வந்த நெய்வேலி என்.எல்.சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் காவலாளிகள் மற்றும் என்.எல்.சி அதிகாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். சார் ஆட்சியர் முன்னிலையில் அமைதிக் கூட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்ற என்.எல்.சி அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முழு ஒத்துழைப்புடன் கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.