/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt (3)_10.jpg)
சரக்கு அல்லது சேவை வழங்காமல் ஜிஎஸ்டி வரியில் மோசடி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வணிகத்தில் ஈடுபடாத சில அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வரி செலுத்தும் நபராக பதிவு செய்து, அதன் மூலம் சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல், போலிப் பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்டு வரி வரவை மாற்றுவது தமிழக வணிக வரித்துறைக்கு தெரிய வருகிறது.
இந்த பயனாளர்கள் இது போன்ற மாயையான பரிவர்த்தனைகளில் உள்ளீட்டு வரி வரவு எடுப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
போலிப் பட்டியல்கள் வழங்குதல், போலிப் பட்டியல்கள் வழங்குவதற்கு எவ்வகையிலேனும் உடந்தையாக இருத்தல் மற்றும் போலிப் பட்டியல்கள் மீது உள்ளீட்டு வரி வரவு எடுத்தல் ஆகியவை தமிழக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017-ன் படி அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கத்தக்கக் குற்றமாகும். மேலும் மோசடியாகப் பெறப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, அதற்கு உண்டான வட்டி மற்றும் அபராதத் தொகையுடன் வசூலிக்கப்படும்.
எனவே, மேலே கூறப்பட்டக் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017- ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற தவறுகளைக் கண்காணிக்கத் தவறும் வணிகவரித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)