ADVERTISEMENT

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

02:29 PM Apr 15, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!.

ADVERTISEMENT

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT