
நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கரோனா தொற்றுக் காலத்தில், தன்னுடைய நலன் பாராமல் எளியோரின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்த தொண்டர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தொண்டர்களை ஊக்குவித்துள்ளார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கரோனாத் தொற்று நோய் சீனாவின் ஹுகானிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிய கேரள மாணவரால், 2020 ஜனவரி 30ஆம் தேதியிலிருந்து இந்தியாவிற்கும் பரவத் தொடங்கியது. ஆங்காங்கு ஒன்றிரண்டு கரோனா நோயாளிகள் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில், நாடெங்கிலும் நோய்த் தொற்று அதிகமானது. சமூக இடைவெளி மட்டுமே கரோனாப் பரவலை தடுக்க முடியும் என எச்சரித்த மத்திய அரசு நோய் மேன்மேலும் பரவாமல் இருக்க மார்ச் 24லிருந்து தொடர்ச்சியாக 21 நாட்கள் நாடெங்கிலும் பொது ஊரடங்கினை அமல்படுத்த்தியது. திடீரென அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் எளிய மக்களின் அன்றாடத் தேவைகள் முடக்கப்பட்டது.
இவ்வேளையில், சாலையோர முதியோர்கள், பேருந்து நிலையங்களில் வசிப்போர்கள், அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள், வட மாநிலத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், கோவிலில் படுத்துறங்கும் சாமியார்கள் மற்றும் வீடு இல்லாதவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தேவையான மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்க முன்வந்தது 'காரைக்குடி ஊற்றுகள்' எனப்படும் தன்னார்வலர்களின் வாட்ஸ் அப் குழு.
தினசரி மதியம் 535 பார்சல் சாப்பாடு, இரவு 125 டிஃபன் பார்சல் என 01.04.20 முதல் தொடங்கப்பட்ட உணவு சேவை, தொடர்ச்சியாக 40 நாட்கள் இடைவிடாது எண்ணற்றோர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது, காரைக்குடி ஊற்றுகள் என்கின்றது அமைப்பின் விபரக்குறிப்பு. இதற்காக காரைக்குடி பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களால் இயன்ற பொருளாதாரப் பங்களிப்பினை செய்தவேளையில், தன்னுடைய பங்காக அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ரூ.1 லட்சம் பேரிடர் கால நிதியினை வழங்க, சேதுபாஸ்கரா விவசாயக் கல்லூரியோ தங்களுடைய பங்களிப்பாக 1.1/4 டன் எடையிலான அரிசியை வழங்கி ஊக்குவித்தது. இதே வேளையில், சமைத்த உணவுகளை எவ்வித இடர்பாடும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் எளிய மக்களுக்கு கொண்டுசெல்ல தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஆதரித்தது டி.எஸ்.பி. அருண் தலைமையிலான காரைக்குடி துணைச் சரகக் காவல்துறை.
இந்நிலையில், குடியரசுத் தினத்தன்று தன் நலம் கருதாமல் உழைத்த காரைக்குடி ஊற்றுகள் அமைப்பினை சேர்ந்த தன்னார்வலர்கள் அனைவரையும் தன்னுடைய முகாம் அலுவலகத்திற்கே வரவழைத்து அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார் காரைக்குடி துணைச் சரகக் காவல்துறை கண்காணிப்பாளர் அருண். இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எளிய மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைத் தீர்த்த தன்னார்வலர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுத் தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் காட்டவே இந்நிகழ்வு. இது இன்னும் பல தன்னார்வலர்களை உருவாக்கும்" என்றார்.
படம்: விவேக்