Group Captain Varun Singh admitted to Bangalore Air Force Hospital

Advertisment

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங், உயர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். அவருக்கு உயர்தர சிகிச்சைத் தேவைப்படுவதால், பெங்ளூரில் உள்ளவிமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய அவசர ஊர்தி மூலம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து சூலூர் விமானப்படைத் தளத்திற்கு வருண் சிங் கொண்டு வரப்பட்டார்.

அங்கிருந்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தனி விமானம் மூலம், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். குரூப் கேப்டன் வருண் சிங் முப்படைகளின் தலைமை தளபதியை வரவேற்க சூலூர் வந்து, அங்கிருந்து அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்தில் சிக்கினார். கடந்த 2020- ஆம் ஆண்டு தேஜஸ் போர் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கி, பெரும் விபத்தைத் தவிர்த்தவர் வருண் சிங். இதற்காக இந்த ஆண்டு சவுரிய சக்ரா விருது, அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.