Skip to main content

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: விசாரணைக்காக 5 பேரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸ்

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. 

 

Keelakarai



ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, 2 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் என ஐந்து பேரை விசாரணைக்காக இன்று சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ஒருசில ஊழியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர். வந்தால் நாமும் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.