'Group - 2 Vacancy Increase' - TNPSC Notification

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்த தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.பி. கட்டுப்பாட்டு அலுவலர் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களுடன் புதிதாக 620 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குரூப்-2 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 5,240 லிருந்து 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.