புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், மறமடக்கி, ஏம்பல், மாங்காடு, வடகாடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, ஒட்டங்காடு, குருவிக்கரம்பை, நாடியம், களத்தூர் மற்றும் பல கிராமங்களில் பல வருடங்களாக மராமத்து செய்யப்படாமல் துர்ந்து கிடந்த ஏரி, குளங்களையும், வரத்து வாய்க்கால்களையும் கிராமத்தினர் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் இளைஞர்கள் தன்னார்வமாக சீரமைத்து வருகின்றனர்.

Advertisment

groom and bride gave tree samplings

இளைஞர்களால் சீரமைக்கப்பட்டுள்ள ஏம்பலில் 8 குளங்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தற்போது பெய்த மழைத் தண்ணீராலும் காவிரித் தண்ணீராலும் பெருகி உள்ளது. இந்த நீர் பெருக்கத்தைப் பார்த்து பல வருடங்களுக்கு குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதை பார்க்கும் போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது என்றனர்.

அதே போல இந்த நீர்நிலைகளின் கரைகளை பாதுகாக்க வெட்டி வேர், பனை விதை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் தொடங்கி உள்ளர். மேலும் குளங்களின் மத்தியில் அழிந்து வரும் பறவை இனங்களைக் காக்க சேந்தன்குடி மரம் தங்கச்சாமி பெயரில் குருங்காடுகள் அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த அனைத்திந்திய வாலிபர் சங்கம் விமல்துரை, சுசி ஆகியோரின் திருமணம் கீரமங்கலத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் மேடையில் தயாராக வைக்கப்பட்டிருந்த மா, பலா, நாவல், புங்கன் என பல வகையான ஆயிரம் மரக்கன்றுகளை மணமக்கள் கைஃபா தன்னார்வ நீர்நிலை பாதுகாப்பு குழுவினரிடம் வழங்கி இளைஞர்களால் சீரமைக்கப்பட்டு வரும் நீர்நிலைகளில் அமைக்கப்படும் குருங்காடுகளில் இந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வலியுறுத்தினார்கள். இந்த செயலைப் பார்த்து திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்தவர்களும் மணமக்களை வாழ்த்தியதுடன் பாராட்டியும் சென்றனர்.

மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட கைஃபா குழுவினர் கூறும் போது,"ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய 4 தாலுகாக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்த கைஃபா குழு ஒவ்வொரு தாலுகாவிலும் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் தனது இறுதி மூச்சுவரை மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததுடன் மரம் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சேந்தன்குடி கற்பகசோலை மரம் தங்கச்சாமி பெயரில் குருங்காடுகளை உருவாக்கி வருகிறோம். இப்போது இந்த மணமக்கள் வழங்கிய ஆயிரம் மரக்கன்றுகளையும் குருங்காடுகளில் நடப்பட்டு தொடர்ந்து பராமரித்து வளர்ப்போம் என்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த 4 தாலுகாவிலும் திருமணம், பிறந்த நாள் என்று ஒவ்வொரு நிகழ்சிகளையும் நடத்தும் இளைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அந்த தொகையை எதிர்கால சந்ததிகளுக்காக நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாக்கவும், மரக்கன்றுகளை நடவும் என பயனுள்ள செலவுகளை செய்து வருவது பாராட்டத்தக்கது.