/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem434222111.jpg)
சேலத்தில், மளிகை கடைக்குள் புகுந்து வாலிபரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சேலம் பட்டைக்கோயில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (வயது 52). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். சின்னக்கடை வீதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மகன் ஜெய்ராம் (வயது 22).கடந்த ஜூன் 2- ஆம் தேதி மளிகை கடையில், ஜெய்ராம் வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்தக் கடைக்கு வந்த நான்கு பேர் அவரை காரில் கடத்திச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள் வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், அவரை கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. கடத்திய கும்பலும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.
கடத்தல் கும்பல், பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் பெங்களூருவுக்கு விரைந்து சென்று ஜெய்ராமை மீட்டு வந்தனர். அப்போது கடத்தல் கும்பலை பிடிக்க முடியவில்லை.
ஜெய்ராமிடம் விசாரணை நடத்தியதில் கடத்திச் சென்ற கும்பலை பற்றிய முழு விவரமும் தெரிய வந்தது. அதன்பேரில் பெங்களூருவில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகாராம், பிரகாஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை சேலம் நகர காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை சப்ளை செய்ததற்கு ஜெய்ராம் பணம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், கடைசியாக வாங்கிய புகையிலை பொருள்களுக்கு பணம் தரவில்லை. இதனால் ஜெய்ராமை கடத்திச்சென்று, அவருடைய தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ள விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தன.
இதையடுத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)