
சென்னையை சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் மகனை கும்பல் ஒன்று கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, நான்கு கிலோ வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் மொபைல் ஆப் மூலம் அந்த இளைஞர் சிக்கலில் சிக்கியது தெரியவந்துள்ளது.
சென்னை வியாசர்பாடி எம்கேவி நகரைச் சேர்ந்தவர் ஹித்தேஷ். இவர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் ஒருவரின் மகன் என்று தெரியவருகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஹித்தேஷ். கிக்ரிண்டர் என்ற ஆப் மூலம் பழகியர்களை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்பொழுது பெண் உட்பட மூன்று பேர் வீட்டுக்கு வந்துள்ளனர். ஹித்தேஷிடம் பேச்சுக் கொடுத்தவர்கள் திடீரென அவரை கட்டிப்போட்டு பாத்ரூமுக்குள் அடைத்து விட்டு வீட்டில் இருந்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து திருடிச் சென்றுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் 'கிரிண்டர்' செயலியை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதி இருந்தார். பல்வேறு நவீன முறைகளில் போதைப் பொருட்கள் விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. 'கிரிண்டர்' என்ற ஆப் மூலம் போதைப்பொருள் அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கிரிண்டர் செயலியை தடை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் சார்பாக கடந்த மாதம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.