/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dad-hsc-art-1.jpg)
கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர் ஆவர். இவர் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16) கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த சூழலில் அன்றைய தினம் இவருக்கு இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.
அதே சமயம் தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்த நிலையில் தன்னை திடப்படுத்திக் கொண்டு இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றார். அப்போது இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dad-hsc-art.jpg)
இந்நிலையில் தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர்.
அதில் ராஜேஸ்வரி 600க்கு 474 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அதாவது, தமிழ் - 83, ஆங்கிலம் - 76, இயற்பியல்- 70, வேதியியல் - 83, கணினி அறிவியல் - 86 ,கணிதம் - 76 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியின் தந்தை ரத்ன வடிவேல் இறந்த நாளன்று எழுதிய இயற்பியல் தேர்வில் ராஜேஸ்வரி 100க்கு 70 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவு குறித்து மாணவி ராஜேஸ்வரி கூறுகையில், “மார்ச் மாதம் 15 ஆம் தேதி இயற்பியல் நாளன்று என்னுடைய தந்தை இறந்து விட்டார். இருப்பினும் தேர்வு எழுத் சென்றேன். அதன்படியே தேர்வு முடிவும் நன்றாக வந்துள்ளது. பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கு செல்ல முயற்ச்சி செய்வேன் எனக் கூறினார்.
Follow Us