Skip to main content

மெரினா கலங்கரை விளக்கம்- பட்டினம்பாக்கம் லூப் சாலையில் நடைபாதை!- உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த சென்னை மாநகராட்சி! 

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை, லூப் சாலையில் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக, உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் நேற்று (08.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Greater chennai corporation high court beach and loop road


ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மெரினா கடற்கரையில் தற்போதைய நிலையில் 1962 கடைகள் இயங்கி வரும் நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக 27.04 கோடி ரூபாய் செலவில் 7 அடி நீளம்,3 அடி அகலத்திலான ஒரே மாதிரியான 900 கடைகளை  மாநகராட்சியே அமைத்துக் கொடுத்து ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் வியாபாரிகளுக்கு ரூபாய் 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனைக் கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் நிரந்தர மீன் அங்காடி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

இந்த வழக்கு நேற்று (08.01.2020) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை  வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை  லூப் சாலையில் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Greater chennai corporation high court beach and loop road

மாநகராட்சி கொடுத்துள்ள விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்படவுள்ள புதிய கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு கண்டிப்புடன் தவிர்க்கப்பட வேண்டுமெனவும், அதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.

கடைகள் வடிவமைப்பு மற்றும் எத்தனை கடைகளுக்கு அனுமதி  என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 22- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்