Advertisment

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்துவதைத் தடுத்திடுக!திருமாவளவன் வலியுறுத்தல்

t

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்துவதைத் தடுத்திடுக என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

Advertisment

’’ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலில் தனிப்பட்ட மதம் சார்ந்த அமைப்பு ஒன்று நிகழ்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தக் கோயிலைப் பாழ்படுத்துவதற்கே அது வழிவகுக்கும். எனவே டிசம்பர் 7&8 தேதிகளில் நடக்கவுள்ள அந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Advertisment

‘வாழும் கலை ‘ என்ற அமைப்பை நடத்திவரும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் டிசம்பர் 7, 8 தேதிகளில் தஞ்சைப் பெரிய கோயிலின் உள்ளே ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. வணிக நோக்கம் கொண்ட அத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் தொல்லியல் துறையின் ஒப்புதலின்றி , மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் கோயிலில் இப்படி தனியார் நிகழ்ச்சி நடத்த சட்டரீதியாக அனுமதி கிடையாது. அதை மீறி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதென்றால் அதிகார உயர் பதவி வகிப்பவர்களின் தலையீடு இல்லாமல் அது நடந்திருக்காது. அப்படி தலையிட்டு அனுமதி வழங்கச்செய்தது யார் என்பதைத் தமிழக அரசு வெளிப்படுத்தவேண்டும்.

யமுனை நதிக்கரையில் ‘ உலகப் பண்பாட்டுத் திருவிழா’ என்று கலாச்சார நிகழ்ச்சி நடத்தியபோது அந்த நதியின் கரையைச் சேதப்படுத்தியதற்காக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த ‘ வாழும் கலை ‘ அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலையும் பாழாக்க எப்படி அந்த அமைப்புக்கு அனுமதி அளித்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

‘யுனெஸ்கோ’ அமைப்பால் உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயிலைப் பாழாக்கும் வகையில் நடக்கும் இந்த முயற்சியைத் தமிழக அரசு தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’

Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe